Friday, April 3, 2015

ப Ri சு P போட்டி !

எனக்கு மிகவும் பிடித்த முதல் 3 காமிக்ஸ் கதாநாயகர்கள் :

1. சிஸ்கோ கிட்
2. பில் காரிகன்
3. ரிப் கிர்பி

So, Rip kirby [Pioneer comics ] கதையே பிரகாஷ் பப்ளிஷர்சிடமிருந்து, எனக்குப் பரிசாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி [ அதுவும் விஜயன் சார் ஆட்டோகிராப் உடன் ] ! 


சந்தோஷத்தை  நண்பர்களுடன்  பகிர்வதற்காக  இதோ  சில  புகைப்படங்கள் :
Tuesday, June 17, 2014

வாண்டுமாமா - சிறுவர் இலக்கியத்தின் தந்தை
 
தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தின் தந்தை வாண்டுமாமா காலமானார்.

குழந்தைகளுக்காக மாய மோதிரம், மந்திரக் கம்பளம் ,குள்ளன் ஜக்கு போன்ற பல அற்புதக் கதைகளைப் படைத்தவர் வாண்டுமாமா அவர்கள்.
 
வாண்டுமாமா பெரியவர்களுக்கும் கௌசிகன் என்ற பெயரில் சந்திரனே சாட்சி, அழகி போன்ற சமூக நாவல்களை எழுதியிருக்கிறார். சந்திரனே சாட்சி சித்திரத் தொடராகவும் வெளி வந்தது. பாமினிப் பாவை , ஜூலேகா ,புலிக் குகை போன்ற சரித்திர நாவல்களையும் எழுதியுள்ளார்.

சூரியக் குடும்பம் ,விண்வெளி வாழ்க்கை போன்ற பல அறிவியல் நூல்களை எழுதியுள்ளார். பாகவதம் என்ற புராணக் கதையையும் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய சுழிக் காற்று அனைவரும் தவறாமல் படித்து ரசிக்க வேண்டிய மர்ம நாவல் [என் All time favoriteகளில் ஒன்று]. இவரது சுவாரசியமான வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள இவர் சுய சரிதையான எதிர் நீச்சலைப் படியுங்கள்.வெளி நாட்டுக் காமிக்ஸைத் தமிழரிடம் பிரபலம் ஆக்கியது முத்துக் காமிக்ஸ் என்றால் தரமான சித்திரக் கதைகளைத் தமிழிலேயே உருவாக்கிச் சிறுவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களையும் கவர்ந்தது வாண்டுமாமா அவர்களே ! சிலையைத் தேடி, மூன்று மந்திரவாதிகள், ஆசைகள் மடிவதில்லை ,வீர விஜயன் போன்ற அற்புதச் சித்திரக் கதைகளை மறக்க முடியுமா?

இப்போதும் அவர் முன்பு எழுதிய கதைகளான பலே பாலு தினமலர் சிறுவர் மலரிலும், மர்ம மாளிகையில் பலே பாலு ஹிந்து நாளிதழிலும் தொடர்களாக வந்து கொண்டிருக் கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.


 

'இவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப இயலாது ' என்ற வார்த்தைகளை நாம் பலருக்கும் உபயோகித்திருக்கின்றோம் . எனினும் இவை வாண்டுமாமாவுக்கு நூறு சதவீதம் பொருத்தமானவை. சிறுவர் இலக்கியத்தில் வாண்டுமாமாவுக்கு அடுத்தபடியாக ஒருவரைக் குறிப்பிட வேண்டுமென்றால் ,தீவிரமாக யோசித்தாலும் விடை கிட்டுமா என்பது சந்தேகமே !

 

Saturday, May 3, 2014

மாய வலை !


காமிக்ஸ் என்னும் அற்புத உலகத்திற்குள் என்னை வலை வீசி இழுத்த புத்தகம் மாலைமதியில் 1-2-1976-ல் வெளி வந்த 'மரண வலை '[ வெளியீடு எண் -122]. அதுவே நான் படித்த முதல் கதைப் புத்தகம் . அநேகமாக அது வெளி வந்த நான்கைந்து வருடங்கள் கழித்துப் படித்திருப்பேன் .


 


மரண வலை AFI நிறுவனத்தினரால் ஆங்கிலத்திலும் வெளியிடப் பட்டது. இதன் original 'King Features Syndicate' நிறுவனத்தினரால் 19-5-1973 முதல் 18-8-1973 வரை வெளியிடப் பட்டது.

Al Williamson [Artist ] மற்றும் Archie Goodwin [script writer ] combination -ல் உருவான அசத்தல் கதைதான் மரண வலை.

மில்லியனர் செபாஸ்டியனால் திகில் தீவிற்குக் கடத்தப் பட்ட சீக்ரட் ஏஜென்ட் பில் காரிகனும் இன்னும் சிலரும் வேட்டையா , விளையாட்டா என்று யூகிக்க முடியாத அளவிற்கு அதிபயங்கர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட , அதில் கடைசி ஒருவர் மட்டுமே உயிர் தப்பும் வாய்ப்புள்ளது என்று லேசாக சந்தோஷப் படக் கூட முடியாத படி , எஞ்சி இருக்கும் ஒருவருக்கும் இறுதியில் உயிரும்,உடலும் தங்குமா என்னும் கேள்விக்கு விடை காண நீங்கள் விரும்பினால் மரண வலைக்குள் நுழைவதுதான் ஒரே வழி ! [அப்பாடா .... சாண்டில்யன் பாணியில் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்பது இப்போது புரிகிறது !!!]

இதே காமிக்ஸ் பல வருடங்கள் கழித்து Indian express நாளிதழில் 1989-ல் தொடராக வெளி வந்தது. உடன் தினமணியிலும் தமிழில் வெளி வந்திருக்க வாய்ப்புள்ளது.

மீண்டும் ராணி காமிக்ஸில் மரணத் தீவு என்ற பெயரில் [ வெளியீடு எண் - 415] அக்டோபர், 2001-ல் வெளி வந்தது.
இதே கதையோட்டப் பாணியில் starblazer காமிக்ஸில் Killer robot என்ற விண்வெளிக் கதை [வெளியீடு எண் -6] 1979-ல் வெளி வந்துள்ளது.

 
முத்து காமிக்ஸில் வெளி வந்த மரண வலையும் [வெளியீடு எண் - 92] மாலைமதியில் வந்த மரண வலையும் வெவ்வேறு கதைகள் .

                   

 


   முத்து காமிக்ஸ் - மரண வலையிலும்  கர்ரிகன்தான் ஹீரோ .  ரத்னா காமிக்ஸில் மரண வலை என்ற பெயரில்  வந்த சித்திரக் கதையில் மட்டும் டார்ஜான் ஹீரோ. ஆச்சரியமாக, ராணி காமிக்ஸில் வந்த 500 வெளியீடுகளில் மரண வலை என்ற தலைப்பில் எந்த புத்தகமும் இல்லை.


அண்மையில் IDW நிறுவனத்தினரால் Al Williamson , Archie Goodwin combination -ல் உருவான அனைத்துக் காரிகன் கதைகளும் [1967-1980] வெளியிடப் பட்டன. அதில் முத்து மற்றும் மாலைமதியில் வந்த இரண்டு 'மரணவலை ' களையும் காணலாம்.

Al Williamson-ன் நுணுக்கமான ஓவியத் திறன் IDW வெளியீடுகளில் தெளிவாகப் புலப் படுகிறது [தரமான தாள் மற்றும் சிறியதாக்கப்படாத ஓவியங்கள் காரணமாக இருக்கலாம் ].Al Williamson , Archie Goodwin combination -ல் கடைசியாக உருவான காரிகன் கதை லயன் காமிக்ஸில் எதிரிக்கு எதிரி [வெளியீடு எண்- 94]என்ற பெயரிலும் ,இந்திரஜால் காமிக்ஸில் The crimial genius [V21 N21]என்ற பெயரிலும் வெளி வந்தது.
 
உலகப் புகழ் பெற்ற கர்ரிகன் சித்திரத் தொடரிடமிருந்து விடை பெறுவதை , தங்கள் கடைசி strip -ல் Archie Goodwin நமக்குக் குறிப்பாக உணர்த்துவதை கவனிக்கவும் [END -Not bad at all ]!

Al Williamson-ம் தன் பங்குக்கு ,symbolic ஆக சூர்ய அஸ்தமனத்தை வரைந்திருக்கிறார் !! 
Secret Agent -ஐ ஜனவரி ,1934-ல் உருவாக்கியது Dashiell Hammett மற்றும் Alex Raymond
[ நம் அபிமான Rip kirby மற்றும் Flash Gordon ஓவியத் தொடர்களையும் உருவாக்கியது Alex Raymond தான் ]. ஆரம்பத்தில் பெயரில்லாமல் X -9 என்று அழைக்கப் பட்ட Secret Agent பல வருடங்களுக்குப் பிறகே Phil Corrigan என்ற பெயரைப் பெற்றார். பெயர் சூட்டியவர் Mel Graff என்ற ஓவியர்.

1980 முதல் 1996 வரை George Evans கதை,ஓவியம் இரண்டையும் கவனித்துக் கொண்டார். இந்திரஜால் காமிக்ஸில் வந்த காரிகன் கதைகளில் பெரும்பாலானவை George Evans உருவாக்கியவையே. இவரது ஓவியங்கள் என்னைப் பொருத்த வரை சுமார் ரகம்தான்.வான் வெளி சர்க்கஸ் , பிணம் காத்த புதையல் , மர்ம முகமூடி, இரத்தமில்லா யுத்தம் , ஒரு பனிமலை பயங்கரம் போன்ற சில கதைகளைத் தவிர முத்து மற்றும் லயன் காமிக்ஸில் வெளி வந்த பெரும்பாலான காரிகன் கதைகள் Al Williamson வரைந்தவையே. மேலும் மாலைமதி மற்றும் மேகலா காமிக்ஸில் வந்த பெரும்பாலான காரிகன் கதைகள் Al Williamson வரைந்தவைதாம். Al Williamson-க்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் !Saturday, February 22, 2014

இனிய செய்தி !


 
ஒரு மகிழ்ச்சியான விவரத்துடன்  இந்த Blog - ஐ ஆரம்பிக்கின்றேன். வாண்டுமாமா அவர்களின் பெரும்பாலான புத்தகங்கள் இதற்கு முன்னர் வானதி மற்றும் பழனியப்பா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டன. தற்போது வாண்டுமாமாவின் கீழ்க்கண்ட ஆறு புத்தகங்களை கவிதா பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கின்றனர்:
1.பன்னாட்டு பல்சுவைக் கதைகள்.
2.வேடிக்கை விநோதக் கதைகள்.
3.நம்பிக்கை தரும் நவரசக் கதைகள்.
4.மதிநுட்பக் கதைகள்.
5.நகரங்களின் கதை.
6.ஏன்?எங்கே?எப்படி?


முதல் 4 புத்தகங்களும் சிறுகதைத் தொகுப்புகளாகும். பெரும்பாலான கதைகள் கோகுலம்,கல்கி மற்றும் பூந்தளிரில் வந்தவை . அனைத்துக் கதைகளிலும் நம் அபிமான ஓவியர்கள் செல்லம்,மணியம் செல்வன், ரமணி போன்றோரின் கண்கவர் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே 30,40 வருடங்களுக்கு முந்தைய Nostalgic எண்ணங்களில் நீந்த நினைக்கும் நண்பர்கள் உடனே இந்தப் புத்தகங்களை வாங்க வேண்டுகிறேன் . உங்கள் குழந்தைகளுக்கும் வாண்டுமாமாவின் மந்திர எழுத்துக்களை அறிமுகம் செய்ய ஒரு வாய்ப்பு.


நகரங்களின் கதை : இதில் பிரசித்தி பெற்ற நகரங்களைப் பற்றிய விவரங்களையும் ,அந்த நகரங்கள் சம்பந்தப் பட்ட புராண மற்றும் வரலாற்றுக் கதைகளையும் வாண்டுமாமா சுவாரசியமாகக் கொடுத்திருக்கிறார்.

ஏன்?எங்கே?எப்படி? : இதில் மூளைக்கு வேலை தரும் புதிர்,விடுகதை மற்றும் விளையாட்டுக்களை வாண்டுமாமா அவருக்கே உரிய பாணியில் அளித்திருக்கிறார் .
  பின் அட்டை:  


கண்கவர் ஓவியங்கள்:

 புத்தகம் ஒன்றின் விலை ரூ.350. அனைத்துப் புத்தகங்களையும் வாங்கினால் விலைக்குறைப்புக்கு வாய்ப்புள்ளது.
கவிதா பதிப்பகத்தினரின் தொலைபேசி எண்: 044 24364243 , 24322177.

கவிதா பதிப்பகத்தினர் (வாண்டுமாமாவின் ) மேலும் 4 புத்தகங்களை விரைவில் வெளியிட இருக்கின்றனர். புத்தகங்களின் விற்பனையைப் பொறுத்து மற்ற புத்தகங்களும் வெளிவர வாய்ப்புள்ளது.

எனவே வாண்டுமாமாவின் தீவிர ரசிகர் நீங்கள் என்பதை நிரூபிக்கும் தருணமிது!